Categories

News & Events,

Description

Weekend interview on “Ancient Tamil civilization” in Dallas Tamil Radio, Dallas.

அறிவியல் பார்வையில் பண்டைய தமிழ் நாகரிகம்

அமெரிக்க வானொலியில் தொல்லியல் அறிஞர் டி.கே.வி. ராஜன் நேர்காணல்

வானொலியில் ஒலித்த டி.கே.வி ராஜனி;ன் நேர்காணல் கருத்துத் துளிகள்

மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் (MTS) சார்பில் மஸ்தி வானொலி நிகழ்ச்சியில் அறிவியல் பார்வையில் பண்டைய தமிழ் நாகரிகம் எனும் தலைப்பில் தொல்லியல் ஆய்வாளர் டி.கே.வி ராஜன் பேட்டியளித்தார். தமிழ்ச்சங்கத்தின் தலைவர் கோமதி பெரியவழுதி, வானொலி தொகுப்பாளர்கள் சக்தி மற்றும் உன்னா உடனிருக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

2004 இல் தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் கிடைத்தபிறகு தமிழின் தொன்மையை வெளிப்படுத்தும் தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றை டி.கே.வி ராஜன் தம் உரையில் தொகுத்து விளக்கினார். தொல்லியல் நோக்கில் நிகழ்த்தப்பெற்ற ஆய்வுகளின் வரலாற்றைப் பறைசாற்றும்  தொகுப்பாக அவரது உரையின் பொருண்மை அமைந்தது.

தொல்லியல் துறையில் என்ன சாதித்திருக்கிறோம்? இன்று வரை தொல்லியல் ஆய்வு வழியாகத் தமிழரின் தொன்மையை உலகெங்கும் ஓங்கி ஒலிக்கச் செய்யும் முக்கியமான கண்டுபிடிப்புகள் எவை? என்னும் வினாக்களுக்கான விடைகளாக டி.கே.வி ராஜனின் பேச்சு அமைந்திருந்தது.

     ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை  ஏற்பட்டால் அதன் தாக்கம்  தொல்லியல் ஆய்வுப் பாதையில் புதிய புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

     தொல்லியல் ஆய்வின் முதல்  மையப் புள்ளியாக அமைந்தது ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி எனலாம். தமிழரின் தொன்மையை 3700 ஆண்டுகளுக்கு முன்பாக ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு முன்னெடுத்துச் சென்றுள்ளது. 1903 ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சிக்குப்பின் 2004 இல் தொல்லியல் ஆராய்ச்சியாளர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற அகழ்வாய்வில் பல அரிய மெய்மைகள் வெளிப்பட்டன.

     இரும்பை உருக்கும் ஆலைகள் ஆதிச்சநல்லூரில் இருந்துள்ளன என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.  3700 ஆண்டுகளுக்கு முன்பே ஆர்சனிக் முறையில் இரும்பைத் தயாரித்திருக்கிறார்கள் என்பது அற்புதமான விஷயம்.  இது விஞ்ஞான ரீதியாக  உறுதி செய்யப்பட்டுள்ளது.  இச்செய்தி INDIAN JOURNAL OF HISTORICAL SCIENCE எனும் ஆய்வுக்கட்டுரையில் வெளியிடப்பட்டு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. ஆகவே “இந்தியாவிலேயே ஆர்சனிக் முறையில் இரும்பு தயாரித்து அதனைப் பயன்பாட்டுப் பொருளாக மாற்றிய பெருமை சிந்துசமவெளி மற்றும் ஆதிச்சநல்லூர் நாகரீகங்களுக்கு மட்டுமே இருந்தது” என்பது குறிப்பிடத்தக்கது.

     ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த (Physical Anthropologist) ராகவன் அவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கிடைத்த எலும்புக்கூடுகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் மூவகை இனங்கள் அங்கு வாழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வேற்றோய்ட் எனும்  அஸ்டரொய்ட்கல் அங்கு வாழ்ந்துள்ளன எனும் ஆய்வு முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “ஆதிச்சநல்லூர் ஒரு  திராவிட நாகரீகம்” என்பதில் ஐயமே இல்லை. ஆனால் அங்கு வாழ்ந்தவர்கள் யார் ? எனும் தேடலுக்கான முதல் ஆராய்ச்சி இங்கிருந்துதான் ஆரம்பமாகிறது.  இந்த ஆய்வை மிக முக்கியமான திருப்புமுனையாக நான் கருதுகிறேன்.

 இந்தியாவிலேயே முதன்முதலாக எழுத்துக்கலையை உருவாக்கியவன் சங்க காலத் தமிழன் என்பதற்கான ஆதாரம் பொருந்தல் என்ற இடத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள்து.  இது பழனிக்கருகில் உள்ளது.  தமிழ்நாட்டிலுள்ள பழனியருகே இருக்கும் பொருந்தல் என்ற இடத்தில் தொல்லியல் அறிஞர் பேராசிரியர் ராஜன் அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் வியப்புக்குரிய இரண்டு பொருட்கள் கிடைத்தன.

  1. ஓன்று தமிழ் பிராமிய எழுத்துக்கள் கொண்ட பானை
  2. இரண்டு அப்பானையில் கிடைத்த அரிசி

அந்த அரிசியை அமெரிக்க BETA ANALYTIC ஆய்வகம் ‘ACCELERATED MASS SPECTROGRAPHY’ எனும் முறையில் ஆய்வுக்குட்படுத்தி> அதன் காலம் கி.மு 490 எனக் கண்டுபிடித்துள்ளது. இதனால் வடமொழிக்கு முன்பே தமிழில் எழுத்துக்கலை உருவானதும் இந்தியாவிலேயே எழுத்துக்கலையைக் கையாண்டவர்கள் சங்கத் தமிழர்கள் என்பதும் கண்டறியப்பட்டது. அது மட்டுமல்ல 2500 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழன் அரிசியைச் சமைத்து உண்டான் என்பதற்கான அருமையான ஆதாரம் இது. அந்த அரிசி ஒரிச சாதிவைகா வகையைச் சார்ந்தது என தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ராஜன் கருதுகிறார். தொடர் ஆய்வுகளின் வழி கூடுதலாகப் பல அரியத் தகவல்களைப் பெறக்கூடும்.

     நாணயவியல் ஆராய்ச்சியில் வியக்கத்தக்க உண்மைகள் வெளியாகியுள்ளன.  கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்புவரை சங்ககால அரசர்களுக்கு நாணயங்கள் அச்சிடும் திறமை இல்லை  ரோமானிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாணயங்களை இவர்கள் மீண்டும் அச்சடித்துப் பயன்படுத்தினார்கள். தனக்கென்று ஒரு நாணயத்தை உருவாக்கவில்லை என்றே ஆய்வாளர்கள் கருதி வந்தனர்.  இது தவறான கருத்து என்பதை முதன்முதலாக நிரூபித்த பெருமை நாணயவியல் ஆராய்ச்சியாளர்  Dr. R. கிருஷ்ணமூர்த்தி அவர்களையே சாரும். சங்ககால அரசர்களான பெருவழுதி, கொற்கைப் பாண்டியன், செழியன், மலையமான் பிறகு பல்லவ நாணயங்கள் எனத் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டை ஆண்ட அரசர்களின் நாணயங்களைக் கண்டுபிடித்துத் தமிழக வரலாற்றிற்குப் புதிய புத்துணர்வைக் கொடுத்தவர்  Dr. R. கிருஷ்ணமூர்த்தி.  அவரின் SANGAM AGE COINS எனும் தன்  நூல் மூலமும் வரலாற்றில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார்.

     பண்டைத்  தமிழர்கள் மிகச் சிறப்பாக வணிகம் செய்து வணிகத்தில் உலகிலேயே இரண்டாம்  இடத்தைப் பெற்றிருந்தனர் என்பதை உலக வரலாறு சொல்கின்றது.  முதலிடத்தை பின்லாந்து நாட்டினர் பெற்றுள்ளனர்.  ஜப்பானிய ஆய்வாளர் நொபரு கரோஷிமாவும் இந்திய ஆய்வாளர் வை. சுப்பராயலுவும் பல கல்வெட்டுச் செய்திகளை இதற்கான ஆதாரமாகச்  சுட்டியுள்ளனர்.  சான்றாக –

  • வியன்னா நாட்டில் கிடைத்துள்ள கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ள காகித ஆவணங்கள் எகிப்து நாட்டிலுள்ள அலெக்சாண்டிரியாவிற்கும் சேர நாட்டின் முசிறி துறைமுகத்திற்கும் இடையே கடல் வாணிபம் நடைபெற்றுள்ளதை எடுத்துரைக்கின்றன.
  • அதேபோல் தமிழகத்திற்கும் சீனாவிற்கும் தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே பெரிய அளவில் வாணிபம் நடைபெற்றுள்ளது என்பதை இப்போது பல கல்வெட்டுச் செய்திகளால் கண்டு பிடித்துள்ளோம்.
  • தாய்லாந்தில் கிடைத்துள்ள தமிழ் பிராமி எழுத்துக்கள் இதற்கு முக்கியமான சான்று.
  • ஆகவே இதுபோன்ற புதிய கண்டுபிடிப்புகளின் வாயிலாகத் தமிழரின் தொன்மையை மட்டுமில்லாமல் தமிழர்கள் எவ்வாறு வணிகத்தில் சிறந்திருந்தார்கள் என்பதையும் கண்டறிந்து உலகிற்குப் பறைசாற்றலாம்.

இதுகாறும் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் பல வியக்கத்தக்க உண்மைகளைக் கண்டறிந்துள்ளது.

     ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அழகன்குளம் என்ற இடத்தில் கடந்த 35 ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சி நடைபெற்ற வருகின்றது இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வினால்தான் இன்றைக்கு 2400 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தின் மிகச் சிறந்த துறைமுகத்தின் பெருமையை நம்மால் அறிய முடிந்தது. இங்கு நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் காளை உருவம் பொறிக்கப்பட்ட சங்ககாலப் பாண்டிய நாணயமும் ரோமானிய கப்பல் உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  இந்த ஆராய்ச்சியைச் சிறப்பாகத் தொடங்கி வைத்த பெருமை புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்கள்  இரா நாகசாமி மற்றும் நடனகாசிநாதன் ஆகியோரைச் சாரும்.  இங்கு இன்றும் தொடர்ந்து ஆராய்ச்சி நடைபெற்று வருகின்றது.  இது பண்டைய தமிழக வணிக வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக அமையுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

     அடுத்த திருப்புமுனையாக அமைந்த ஆய்வொன்று உள்ளது.  பரதவர்கள் எனப்பட்ட தமிழக மீனவர்களைப் பற்றியது அது.  ஆம்!  பண்டைய தமிழக இலங்கை வரலாற்றில் பரதவர்கள் என்று அழைக்கப்பட்ட மீனவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இந்த இரண்டு நாட்டுக் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்த இவர்கள் மீன்பிடித்தல், முத்துக் குளித்தல், குதிரை வியாபாரம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தனர்.  இவர்கள் இலங்கை நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளனர் என்பது இப்போது கல்வெட்டுக்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  பண்டைய கல்வெட்டுக்கள் பலவற்றை அண்மையில்  கண்டுபிடித்துள்ள இலங்கை ஆய்வாளர்கள் பரணவிட்டனார் செனவர்த்தனே ஆகியோர் பரதவர்கள் என்று அழைக்கப்படும் மீனவர்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாகவே இலங்கையில் அரசர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் என்ற தகவலை எடுத்துக்கூறி மெய்ப்பித்துள்ளார்கள்.  மேலும் பல புதிய கல்வெட்டுக்களால் பரதவர் என்று அழைக்கப்படும் மீனவர்களின் சமுதாய வரலாற்றை நாம் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

     அடுத்த முக்கிய திருப்புமுனை பூம்புகாரில் நடைபெற்ற  அகழ்வாராய்ச்சியில் இங்கு சங்க காலக் கட்டடங்களும் U வடிவக் கட்டடங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.  இந்த ஆராய்ச்சி மீண்டும் தொடங்குமானால் நம் தமிழர் நாகரிகத்தின் பெருமையை மட்டுமல்லாமல் தமிழருடைய பண்பாடு மற்றும் வணிகத்தின் முக்கியத்துவத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

     அண்மையில் நடைபெற்ற கீழடி அகழ்வாராய்ச்சி ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.  முதன்முதலாக சங்க காலத் தமிழன் நகர்ப்புறங்களில் எவ்வாறு எல்லாவித  வசதிகளுடன் வாழ்ந்தான் என்ற தகவல்களை இதுவரை நடைபெற்ற கீழடி அகழ்வாய்வு நமக்குத் தெரிவிக்கின்றது.  தமிழர் வாழ்வியல் நாகரிகத்தின் காலம் 2200 ஆண்டுகட்கு முற்பட்டது என்று கீழடி ஆய்வு வழி அறிய முடிகின்றது. ஆனால் தொடர்ந்து நடக்கவிருக்கும் அகழ்வாராய்ச்சியின் வாயிலாக இதன் காலகட்டம் இன்னும் பழைமையை நோக்கி நகரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இங்கு நடைபெற்றுவரும் தொல்லியல் ஆய்வுகளின் புதிய தகவல்களுக்காக உலகம் ஆவலுடன் காத்திருக்கின்றது.

     இப்போது நடைபெற்றுவரும் மிக முக்கியமான ஆராய்ச்சி ஜீவ அணு ஆராய்ச்சி. ஜீனோம் என்று சொல்லப்படும் DNA ஆராய்ச்சி.  இந்திய மக்களை இரண்டுவகையான ஜீவ அணுக்களாகப் பிரித்திருக்கிறார்கள்.  ANI Ancestral North Indians மற்றும் ASI Ancestral South Indians  என்று இரண்டு வகையாகப் பாகுபடுத்துகின்றனர்.  ஆணுடைய Y குரோமோசோம் Y ஜீவ அணுவையும் பெண்ணுடைய மைட்டோ கார்னியா DNA இவற்றையும் இணைத்துப் பார்த்து அந்த மக்களின் தொன்மையைக் கண்டு பிடிக்கலாம்.  அப்படிப் பார்க்கும்போது இன்றைய காலகட்டத்தில் திராவிடர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் வெளியிடங்களிலிருந்து வரவில்லை என்றும் அவர்கள் இந்த மண்ணுக்கே சொந்தமானவர்கள் என்றும் ஓரளவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதனுடைய முழு விவரம் இனிமேல்தான் தெரியும்.

     இவ்வாறாக தொல்லியலின் திருப்புமுனைப் புள்ளிகள் குறித்து டி.கே.வி. ராஜன் குறிப்பிட்டார்.  மேலும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை கிடைப்பதால் ஏற்படும் பயன்கள் குறித்து அவர் பட்டியலிட்டார்.

  1. தமிழுக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்க உலக அறிஞர்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது.
  2. செகாஸ்லோவேகிய அறிஞர் கபில் சுபிலபிலின் “THE SMILE OF MURUGAN” நூலால் சங்க இலக்கியத்தின் புகழ் ஐரோப்பிய நாடுகளில் பரவியது.
  3. ஜப்பானிய ஆய்வாளர் கரோஷிமாவின் ஆய்வு தெற்காசியாவில் புதையுண்ட தமிழக வாணிப ஆவணங்களை மீட்டெடுத்தது.
  4. தமிழக நாணயவியலின் தொன்மை> தமிழகத்தின் கிருஷ்ணமூர்த்தி மற்றும் இலங்கை ஆய்வாளர் சனரத் விக்ரமசிங்கே ஆகியோர் எழுதிய, “A CATALOGUE OF SANGAM AGE PANDIYA AND CHOLA COINS IN THE NATIONAL MUSEUM OF COLOMBO – SRILANKA” எனும் நூல் வழி வெளிப்பட்டது.
  5. வருங்காலத்தில் ஹார்வார்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையின் ஒவ்வோர் ஆய்வும் உலகளாவிய தாக்கத்தைப் பிரதிபலிக்கும்.
  6. தமிழை உலக அரங்கில் நனிபுகழ் எய்துவிக்க உலகளாவிய இயங்குதளத்தை உருவாக்குவதும் இன்றியமையாததாகிறது.

 

வானொலி நிகழ்ச்சித் தொகுப்பு :

சக்தி  ( டல்லாஸ், அமெரிக்கா)

×
img

    Contact Info

    Phone number

    (+91) 9361 708521

    Email address

    indiansciencemonitor@gmail.com

    Address info

    AG 1, Mas Castle, Dhanakoti Raja Street, Ekkaduthangal, Chennai 600032.